உக்ரைன் ஜிம்னாஸ்டிக் வீரரை வேதனைப்படுத்திய ரஷ்ய வீரர்!


உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டிகளை ஜெர்மனி, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் தொடராக நடத்துகிறது சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு (எஃப்.ஐ.ஜி).

அந்த வரிசையில், கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று நடந்த போட்டியில் உக்ரைன் வீரர் கொவ்துன் இல்லியா தங்கம் வென்றார். இப்போட்டியில், ரஷ்ய வீரர் இவான் குலியாக்குக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பதக்க மேடையில் கொவ்துன் இல்லியாவுக்கு அருகில் நின்ற இவான் குலியாக் அணிந்திருந்த பனியனில் ‘இஸட்’ (Z) எனும் ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது அனைவரையும் அதிரவைத்தது. காரணம், ரஷ்ய எழுத்துகளில் ‘இஸட்’ இல்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்குத் தனது ஆதரவைக் காட்டும் விதத்திலேயே அந்த எழுத்து பொறிக்கப்பட்டிருந்த பனியனை இவான் குலியாக் அணிந்துவந்திருந்ததாகக் கருதப்படுகிறது.

ஏன் ‘இஸட்?’

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தச் சென்றிருக்கும் ரஷ்ய டாங்குகளில் ‘இஸட்’ எனும் எழுத்து பெரிய அளவில் குறிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் பிரதானமானது இதுதான்: ரஷ்ய டாங்குகளுக்கும், உக்ரைன் டாங்குகளுக்கும் இடையில் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே, ரஷ்ய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ரஷ்ய டாங்குகளைத் தவறுதலாகத் தாக்கிவிடாமல், சரியாக அடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பதக்க மேடையில் ‘இஸட்’ எழுத்து பொறிக்கப்பட்ட பனியன் அணிந்திருந்த ரஷ்ய வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளின் வீரர்களை மார்ச் 7 (இன்று) முதல் தடை செய்வது என ஏற்கெனவே ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x