இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார் அஸ்வின்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ரவீந்திர ஜடேஜா, 7 முதல் 11 வரை களமிறங்கிய பேட்ஸ்மேன் வரிசையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து பாலோ ஆன் ஆனது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 2வது இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 435 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் கபில்தேவை முந்தி 2வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார். டெஸ்ட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடியது. பின்னர், அஸ்வினின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி 178 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிரோஷன் 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். இரண்டு இன்னிங்ஸை சேர்த்து ஜடேஜா 9 விக்கெட்டுகளையும், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.