"வார்ன் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்து ஸ்தம்பித்து போய்விட்டேன்" என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன், தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் இறந்துகிடந்ததாக கூறப்படுகிறது. அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது. வார்னுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஷேன் வார்னின் திடீர் மரணம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், "வார்ன் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்து ஸ்தம்பித்து போய்விட்டேன். வான் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். நீங்கள் எப்போதும் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இந்தியர்கள் உங்களுக்காக ஒரு சிறப்பு இடத்தை வைத்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, "உண்மையில் இங்கே வார்த்தைகளை இழந்துவிட்டேன், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் விளையாட்டின் ஒரு முழுமையான சகாப்தம், சாம்பியன் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். வார்ன் மறைந்துவிட்டார் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. வாரன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதேபோல், இந்திய வீரர் விராட் கோலி, முன்னாள் வீரர்கள் சேவாக், கம்பீர், ரெய்னா உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஷேன் வார்ன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னும் ஒருவர். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.