ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து காலமானது கிரிக்கெட் ரசிர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒருவர் ராட் மார்ஷ், மற்றொருவர் ஷேன் வார்ன்.
52 வயதான ஷேன் வார்ன், இன்றைய தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களாலும் ஆராதிக்கப்படுபவர். குறிப்பாக இந்திய ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன், 1999 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூட துணை நின்றவர். ஐந்து முறைஆஷெஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெல்ல காரணமாக இருந்தவர். தாய்லாந்தில் கோஹ் சாமுயி எனும் நகரில் வசித்துவந்த ஷேன் வார்ன், மாரடைப்பால் இன்று காலமானார்.
முன்னதாக, 74 வயதான ராட் மார்ஷ், குயின்ஸ்லாந்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அடிலெய்டில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
உலக சாதனை படைத்த விக்கெட் கீப்பர்
ராட் மார்ஷ் என்று அழைக்கப்பட்ட ராட்னி வில்லியம் மார்ஷ், டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்படுபவர். 1970-71 தொடங்கி, 1983-84 வரையிலான காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக சிறப்பாக விளையாடியவர் மார்ஷ். தனது அபாரத் திறமையால், 96 டெஸ்ட் மேட்சுகளில், 355 விக்கெட் விழச் செய்து உலக சாதனை படைத்தவர் அவர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லியும் ஏறத்தாழ இதே எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்தியவர். டென்னிஸ் லில்லி வீசும் பந்துகள் எதிரணியின் பேட்ஸ்மேனின் மட்டையில் பட்டு மார்ஷின் கைகளுக்குள் அடைக்கலமாகிவிடும். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையிலான ‘கெமிஸ்ட்ரி’ ஆஸ்திரேலிய அணியின் பல வெற்றிகளுக்குக் கைகொடுத்தது. இருவரும் இணைந்து 95 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
அதுமட்டுமல்ல, டென்னிஸ் லில்லி அறிமுகமான அதே ஆஷெஸ் டெஸ்ட் தொடரில் (1971) அறிமுகமான மார்ஷ், லில்லியின் கடைசி டெஸ்ட் போட்டியில் (1984) தானும் ஓய்வுபெற்றார். ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார்.
இடதுகை பேட்ஸ்மேனான மார்ஷ், 1972-ல் அடிலெய்டு மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அதுதான் ஒரு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அடித்த முதல் சதம். விக்கெட் கீப்பராக அணியில் சேர்ந்தபோதும், நன்றாக பேட்டிங் செய்த அவர், விக்கெட் கீப்பர் பணியில் திறமை இல்லாதவராகவே கருதப்பட்டார். எனினும் தனது உழைப்பால் தனது திறமையை வளர்த்துக்கொண்டு சிறந்த விக்கெட் கீப்பராகத் திகழ்ந்தார். சுறுசுறுப்பு, வேகம், பாய்ந்து பந்தைப் பிடித்தல் என விக்கெட் கீப்பருக்குத் தேவையான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பல முறை துணை நின்றவர்.
கிரிக்கெட் வீரராக ஓய்வுபெற்ற பின்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் பொறுப்புகளை வகித்தவர் அவர். 2014-ல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தார்.
ஷேன் வார்ன் இறுதியாக போட்ட ட்வீட், மார்ஷுக்கான அஞ்சலிக் குறிப்புதான்.