உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்த ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றனர். 8வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். இந்த தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவை நேரில் வரவழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், "சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த, தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.