ஜூட் பெல்லிங்ஹாம் அடித்த கோலால் செர்பியாவை வீழ்த்தியது இங்கிலாந்து | Euro Cup


கெல்சென்கிர்சென்: ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று கெல்சென்கிர்சென் மைதானத்தில் இங்கிலாந்து - செர்பியா அணிகள் மோதின. 13-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி முதல் கோலை அடித்தது. புகாயோ சகா அடித்த கிராஸை, ஜூட் பெல்லிங்ஹாம் தலையால் முட்டி அற்புதமாக கோலாக மாற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

19-வது நிமிடத்தில் பில் ஃபோடன் உதவியுடன் பந்தை பெற்ற இங்கிலாந்து வீரர் அலெக்சாண்டர் அர்னால்டு, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி அடித்த போது கோல் கம்பத்தின் இடதுபுறம் விலகிச் சென்றது. அடுத்த நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் வலதுபுறம் மிக நெருக்கமாக விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

25-வது நிமிடத்தில் சாகாவிடம் இருந்து பாஸை பெற்று இலக்கை நோக்கி விரைவாக கடத்திச் சென்ற கைல் வால்கர் பாக்ஸ் பகுதியின் மையப்பகுதியில் நெருக்கமாகநின்ற பில் ஃபோடனுக்கு தட்டிவிட்டார். ஆனால் அதை அவர், சேகரிக்கத் தவறினார். இதனால் எளிதாககோல் அடிக்கும் வாய்ப்பை அவர், தவறவிட்டார். முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் செர்பியா அணி வீரர்கள் கடும் சவால் அளித்தனர். 52-வது நிமிடத்தில் ஸ்ட்ரின்ஜா பாவ்லோவிக் கொடுத்த கிராஸை, கோல்கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற பிலிப் மிலா டெனோவிக் சேகரித்து கோலாக மாற்றத் தவறினார். 59-வது நிமிடத்திலும் கோல் அடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை செர்பியாஅணி கோட்டைவிட்டது.

77-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜாரோட் போவன் கொடுத்த கிராஸை கோல்கம்பத்துக்கு மிக அருகே நின்ற ஹாரி கேன் தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால் செர்பியா கோல்கீப்பர் ப்ரெட்ராக் ராஜ்கோவிச் பாய்ந்து தட்டிவிட பந்து கோல்கம்பத்தின் மையத்தில் பட்டு வெளியே சென்றது.

82-வது நிமிடத்தில் செர்பியாவின் டுசான் விலாஹோவிக் இலக்கை நோக்கி உதைத்த பந்தை இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் துள்ளியவாறு தடுத்து விலக்கிவிட்டார். அடுத்த நிமிடத்தில் வெல்ஜ்கோ பிர்மன்செவிக் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்தை கோல் கம்பத்துக்கு முன்புறம் நின்ற ஹாரி கேன் தடுத்தார். அவர், தடுக்கவில்லை என்றால் கோலாக மாறியிருக்கக்கூடும். கடைசி வரை போராடியும் செர்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

x