ஆச்சரியம், ஆனால் உண்மை..!- மெகா ஏலம் போன இங்கிலாந்து வீரர்!


15வது ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்கள் இரண்டாம் நாளாக இன்றும் ஏலம் தொடங்கியது. இதில் இங்கிலாந்து வீரர் ஒருவர் மெகா ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. பெங்களூருவில் நேற்று நடந்த முதல் நாள் ஏலத்தில், 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவியது. 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்களில் இருந்து தங்கள் அணிக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்து ஏலத்தில் எடுக்க, அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மதியம் தொடங்கிய இந்த மெகா ஏலம் நேற்று இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது.

இரண்டாம் நாளாக இன்று மீண்டும் இந்த ஏலம் தொடங்கியது. இன்றைய ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ரூ 11.50 கோடிக்கு பஞ்சாப் அணியும், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை ரூ.2.60 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், அஜிங்கியா ரஹானேவை ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணியும், மந்தீப் சிங்கை ரூ.1.10 கோடிக்கு டெல்லி அணியும், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை ரூ.1.10 கோடிக்கும், இந்திய வீரர் ஜெயந்த் யாதவை ரூ.1.70 கோடிக்கும், இந்திய வீரர் விஜய் சங்கரை ரூ.1.40 கோடிக்கும் குஜராத் டைடன்ஸ் அணியும், இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷானாவை ரூ.70 லட்சத்துக்கும் சிஎஸ்கே அணியும் வாங்கியது.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒடேன் ஸ்மித்தை ரூ.6 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்கோ ஜேன்சனை ரூ.4.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியும், இந்திய வீரர் ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இந்திய வீரர் கெளதமை ரூ.90 லட்சத்துக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை ரூ.5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியும், இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை ரூ.4.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியும், இந்திய வீரர் சந்தீப் சர்மாவை ரூ.50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் வாங்கியது.

ஏலம் எடுக்கப்படாத வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பிஞ்ச், மார்னஸ் லாபஸ்சாக்னே, டேவிட் மாலன், இந்திய வீரர்கள் புஜாரா, சவுரப் திவாரி, இஷாந்த் சர்மா, இயோன் மோர்கன், நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீசம், இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான், தென்னாப்பிரிக்க வீரர் லுங்கிசைனி நிகிடி ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

x