ஆஃப்கன் கோப்பையை முதன்முறையாக வென்ற செனகல்!


ஆஃப்கன் (Africa Cup of Nations) கோப்பையை முதன்முறையாக வென்ற மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது செனகல். ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியான ஆஃப்கன் கோப்பை இறுதி ஆட்டம், கேமரூன் தலைநகர் யாவ்ண்டேயில் உள்ள பால் பியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், எகிப்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது செனகல். 90 நிமிடங்கள் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. பின்னர், கூடுதல் நேரம் ஒதுக்கி வழங்கப்பட்ட பெனால்ட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி எகிப்து 2 கோல்களைப் போட்டது. ஆனால், திறமையான இளம் வீரர்களைக் கொண்ட செனகல், 4 கோல்களை அடித்துக் கோப்பையைக் கைப்பற்றியது. செனகல் அணியின் நட்சத்திர வீரரான சாடியோ மனே, பெனால்ட்டி முறையில் இறுதி கோலை அடித்தார்.

போட்டியின் முடிவில், எகிப்து அணியின் முகமது சாலா, சாடியோ மனேயைக் கட்டித்தழுவி வாழ்த்திய புகைப்படம் நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது.

ஆஃப்கன் போட்டியில் 2019-ல் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்த செனகல், அந்தப் போட்டியில் அல்ஜீரியா அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதேபோல், எகிப்து அணியும் 2017 இறுதிப் போட்டியில் கேமரூனிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

செனகல் முதன்முறையாக ஆஃப்கன் கோப்பையை வென்றிருக்கும் நிலையில், அந்நாட்டில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன.

x