1,000-வது போட்டியில் அசத்தியது இந்திய அணி!


1,000-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி வீரர்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1,000-வது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால், கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, 79 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் சிறப்பாக ஆடி ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற பேபியன் ஆலன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க, 43.5 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷன் 28 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கோலி 8 ரன்னிலும், பண்ட் 11 ரன்னிலும் பெளலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்ததோடு, 60 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் - தீபக் ஹூடா ஜோடி, நிதானமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 28 ஓவரில், 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டையும், அகீல் ஹுசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், 1,000-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

x