கிரிக்கெட்டில் சாத்தியமாகுமா அனைவருக்குமான பிரதிநிதித்துவம்?


இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரநிதித்துவம் வழங்கப்படுகிறதா என்பது, அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வந்தாலும் இந்தப் பிரச்சினை போதுமான அளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. 1932 ஜூன் 25 அன்று, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இன்னும் சில மாதங்களில் 90 ஆண்டுகளை நிறைவுசெய்யவிருக்கும் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ இதழில் வெளியான கட்டுரை ஒன்றின்படி, இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை 303 பேர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவர்களில், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினங்களைச் சேர்ந்தவர்கள் நால்வர் மட்டுமே. பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் இந்திய கிரிக்கெட் அணியில் கிடைக்கவில்லை.

இந்தப் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி, கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்று குரல் எழும்போதெல்லாம், விளையாட்டில் திறமை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால், இத்தனை ஆண்டுகளில் நாட்டின் மக்கள்தொகையில் 25 சதவீதம் உள்ளவர்களுக்கு கிரிக்கெட் அணியில் 2 சதவீத பிரதிநிதித்துவம்கூட இல்லை என்பதிலிருந்தே, கிரிக்கெட் அணித் தேர்வில் திறமையைத் தாண்டிய பல சமூகக் காரணிகள் கோலோச்சுவதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு என்பது கிட்டத்தட்ட தொடக்கூடாத பேசுபொருளாக இருந்துவருகிறது. இந்தச் சூழலில், இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தியதன் மூலம் இதுவரை உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத பிரிவினருக்கு பிரிதிநித்துவம் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியிடம், இந்திய அணி அண்மையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

வெள்ளையர் ஆதிக்க வரலாறு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு கொள்கையின் தேவையைப் புரிந்துகொள்வதற்கு, சர்வதேச கிரிக்கெட்டில் அந்நாட்டின் வரலாற்றை கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். மற்ற பல காமன்வெல்த் நாடுகளைப் போலவே, தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டிஷார் மூலமாக கிரிக்கெட் விளையாட்டு வேறூன்றியது. 1888-ல், இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தாய்மண்ணில் தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாடியது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த 3-வது அணி ஆனது. ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்கத்தின் விளைவால், தென்னாப்பிரிக்காவில் நீக்கமற நிறைந்திருந்த வெள்ளையரின் ஆதிக்கம் கிரிக்கெட்டையும் விட்டுவைக்கவில்லை.

1948-ல் தொடங்கிய இன ஒதுக்கல் (Apartheid) கொள்கை, கறுப்பின ஆப்பிரிக்கர்களும் வெள்ளையரல்லாத பிறரும் அந்நாட்டில் கிரிக்கெட் விளையாடவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. 1960-களில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடும் வெளிநாட்டு அணிகளில்கூட, வெள்ளையர் அல்லாத வீரர்கள் இடம்பெறத் தடை இருந்தது. இனஒதுக்கல் கொள்கைக்காக சர்வதேச அளவில் பல தளங்களில் தென்னாப்பிரிக்காவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 1971-ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்குக் காலவரையற்ற தடையை விதித்தது. 1991-ல் அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. 1994-ல் இன ஒதுக்கல் கொள்கை தென்னாப்பிரிக்காவில் முடிவுக்கு வந்தது. வெள்ளையர் அல்லாதவர்களும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெறும் சூழல் உருவானது. 1992-ல், ஓமர் ஹென்றி என்னும் முதல் வெள்ளையரல்லாத வீரர் தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடினார். 1998-ல், மகாயா நிடினி தென்னாப்பிரிக்காவின் சர்வதேச அணியில் இடம்பெற்ற முதல் கறுப்பின ஆப்ரிக்கர் என்னும் வரலாற்றைப் படைத்தார். இது, போன்ற விதிவிலக்குகளைத் தாண்டி வெள்ளையர் அல்லாத பிற இனத்தவர்க்குத் தென்னாப்பிரிக்க அணியில் போதுமான பிரதிநிதித்துவம் சாத்தியப்படவில்லை.

அணிக்குள் நிலவிய பாகுபாடு

சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிடினி, தன் சக வீரர்களால் பல வகைகளில் ஒதுக்கப்பட்டதை பல முறை பதிவுசெய்திருக்கிறார். தன்னுடன் அமர்ந்து யாரும் உணவருந்த மறுத்தது, அணியினருடன் ஒரே பேருந்தில் பயணிக்க முடியாமல் பல முறை தங்குமிடத்திலிருந்து மைதானத்துக்கு ஓடிச் சென்றது என நிடினியின் வேதனைக் கதைகள் நீள்கின்றன. தற்போது தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியபோது, வெள்ளையர் அல்லாத சக வீரர்களிடம் நிறவெறியுடன் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கறுப்பின அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலைக்குப் பிறகு, சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்த ’பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளின் வீரர்களும் போட்டித் தொடங்குவதற்கு முன், ஒரு காலின் முட்டியைத் தரையில் ஊன்றி கறுப்பின மக்களுக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க மட்டையாளர் குவின்டன் டி காக் அந்த உறுதிமொழியை எடுக்கமறுத்தது பெரும் சர்ச்சையானது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபிறகு தீண்டாமை சட்டப்படி குற்றமாக்கப்பட்டுவிட்டாலும், சமூகத்தில் அது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல், தென்னாப்பிரிக்காவிலும் இன ஒதுக்கல் கொள்கை சட்டப்படி நீக்கப்பட்டுவிட்டாலும் சமூகத்தில் கறுப்பின ஆப்பிரிக்கர்கள் மீதும் வெள்ளையரல்லாத பிறர் மீதும் வெறுப்பையும் ஏளனத்தையும் உமிழும் வெள்ளையர்களின் நிறவெறியும் மேட்டிமை மனநிலையும் இன்னும் நீங்கிவிடவில்லை என்பதற்கான சான்றுகளே, மேற்கூறிய சம்பவங்கள்.

வெள்ளையரல்லாதோருக்கான விகித இலக்கு

தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணியில் வெள்ளையரல்லாதோர் கவனம் பெறாமல் போனதற்கு, அல்லது வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு பல ஆண்டுகால இன ஒதுக்கல் கொள்கையின் எச்சங்களும் வெள்ளையர் மனங்களில் அதன் அடிப்படையான நிறவெறிச் சிந்தனைகள் இன்னும் தொடர்வதுமான சமூகச் சூழல் முதன்மையான காரணமாக அமைந்துள்ளது. இதை உணர்ந்துகொண்டதன் விளைவாக, 1990-களின் பிற்பகுதியிலிருந்தே மாநில அளவிலான கிரிக்கெட் அணிகளில் வெள்ளையரல்லாதோருக்குக் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டுவந்தது. இது, திறமைவாய்ந்த வெள்ளையர்களுக்கான வாய்ப்பை மறுப்பதாக வீரர்கள் பலரும் கிரிக்கெட் ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் உள்ளிட்டோர் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து அந்நாட்டு கிரிக்கெட் அணியின் மதிப்புமிகு வீரர்களாக ஜொலித்தனர். வெள்ளையரல்லாதோருக்கு இடங்களை ஒதுக்கும் நடைமுறை காரணமாகவே, தனக்குத் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றும் அதனாலேயே தான் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்ததாகவும் பல முறை பதிவுசெய்திருக்கிறார் பீட்டர்சன்.

எதிர்பார்க்கப்பட்ட பயன்களை அளிக்கவில்லை என்ற காரணத்தால், விளையாட்டில் இடஒதுக்கீடு முறையை 2007-ல் தென்னாப்பிரிக்கா கைவிட்டது. ஆனால், மீண்டும் 2016-ல் அதிகாரபூர்வமாகவே வெள்ளையரல்லாதோருக்கான இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் விளையாடும் 11 வீரர்களில் குறைந்தபட்சம் 6 பேர் வெள்ளையரல்லாதவர்களாக இருக்க வேண்டும். அந்த 6 வீரர்களில் குறைந்தபட்சம் 2 கறுப்பின ஆப்பிரிக்கர்கள் இடம்பெற வேண்டும் என்று அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. ஒவ்வொரு போட்டியிலும் இந்த விகிதத்தை கடைபிடிக்க வேண்டியதில்லை. ஆனால், ஆண்டின் முடிவில் அணி விளையாடிய ஒட்டுமொத்த போட்டிகளின் சராசரியைக் கணக்கிடும்போது, வெள்ளையர்களுக்கும் வெள்ளையரல்லாதோருக்கும் 5:6 என்னும் விகிதத்தில் இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும். விகித இலக்கை நிறைவேற்றத் தவறியதால், 2017-ல் தெனாப்பிரிக்காவில் பல அணிகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளை நடத்த அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தடை விதித்தது. வெள்ளையரல்லாதோருக்கான பிரதிநிதித்துவ இலக்கு மீண்டும் அடையப்பட்ட பிறகே அந்தத் தடை நீக்கப்பட்டது.

விமர்சகர்களை வாயடைக்கச் செய்த வெற்றி

இந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்குக் காரணம் இந்திய அணியில் சர்வதேசப் புகழ்பெற்ற வீரர்கள் இடம்பெற்றது மட்டும் அல்ல. தென்னாப்பிரிக்க அணியில் இடஒதுக்கீட்டு கொள்கையின் காரணமாக, வெள்ளையரல்லாத வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்ததும் அவர்களில் பலர் போதிய அனுபவமோ திறமையோ இல்லாதவர்களாகக் கருதப்பட்டதும்தான். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றவுடன், இடஒதுக்கீட்டின் காரணமாகத்தான் தென்னாப்பிரிக்க அணியின் தரம் குறைந்துவிட்டது எனும் வாதம் பலரால் முன்வக்கப்பட்டது.

டெம்பா பவுமா

ஆனால், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று 50 ஓவர் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி, விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளது. குறிப்பாக 50 ஓவர் போட்டிகளில் அணிக்குத் தலைமை வகித்த கறுப்பின ஆப்பிரிக்கரான டெம்பா பவுமா ஒருகாலத்தில், திறமை இல்லாமல் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் காரணமாகவே அணியில் இடம்பெற்றிருப்பதாக விமர்சிக்கப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது. ஆக, வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டால் அனைத்துத் தரப்பிலிருந்தும் திறமைசாலிகள் எழுச்சிபெறுவார்கள். அதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வெற்றிகளும் புகழ்மாலைகளும் கிடைக்கும் என்பது, தென்னாப்பிரிக்க அணியின் இந்த வெற்றி மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்தும் பிசிசிஐ, முழுமையான தற்சார்பு அமைப்பாகவே செயல்பட்டுவருகிறது. எனவே, சுயசிந்தனையுடன் செயல்பட்டு இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த இளம் திறமைசாலிகளை ஊக்குவிப்பது, அவர்களுக்கான பயிற்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது, வாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற பிற நடவடிக்கைகளின் மூலமாகவாவது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்!

x