புதினுக்கு உறக்கம் வரவழைத்த உக்ரைன்: ஒலிம்பிக் விநோதம்!


ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைனை போர் பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யாவின் அதிபர், ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் உக்ரைன் வீரர்களால் ’உறக்கத்தில்’ ஆழ்ந்தார் என்ற விநோத செய்தி வெளியாகி இருக்கிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதன் தொடக்க விழாவில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் பங்கேற்று இருந்தார். பிரதான விருந்தினருக்கான இருக்கையில் அமர்ந்து பல தேசத்து வீரர்களின் அணிவகுப்பினை பார்வையிட்டு வந்த புதின், திடீரென கண்கள் மூடி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது உக்ரைன் நாட்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றதாக மேற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வரும் ரஷ்யாவின் செய்கையால், உலக நாடுகளிடையே மற்றுமோர் உலகப்போர் நேருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் அணிவகுத்துள்ளன. பேச்சுவார்த்தை முதல் பொருளாதார தடைவிதிப்பு அச்சுறுத்தல்கள் வரை எதற்கும் மசியாத ரஷ்யா, கோடைக்காலம் தொடங்கியதும் உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு தயாராக உள்ளது.

ரஷ்யாவின் போர்முனைப்புக்கு, அமெரிக்கா போன்று எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள், இந்தியா போன்று மதில்மேல் பூனையாய் அமைதி காக்கும் நாடுகள் ஆகியவற்றின் மத்தியில், சீனா வெளிப்படையாக ரஷ்யாவை ஆதரித்து வருகிறது. ரஷ்ய வீரரின் ஊக்கமருந்து பிரச்சினை காரணமாக ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட சூழலில் , ஒலிம்பிக் தொடக்க விழாவின் முக்கிய விருந்தினராக பங்கேற்க புதின் அழைக்கப்பட்டிருந்தார்.

அந்தவகையில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பை ரசித்துப் பார்த்த புதின், உக்ரைன் வருகையின்போது ’உறக்கத்தில்’ ஆழ்ந்துபோனார். உக்ரைன் வீரர்கள் சென்ற பிறகே புதின் கண்விழித்தார். ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, ரஷ்ய கொடிகூட ஒலிம்பிக்கில் இடம்பெற தடைவிதிக்கப்பட்டிருந்த சூழலில், பொறாமை காரணமாகவே ரஷ்ய அதிபர் கண்களை மூடிக்கொண்டார் என்று உக்ரைன் தேசத்தினர் சாடி வருகின்றனர்.

ஒரு வல்லரசு தேசத்தின் தலைவர், எதிரிநாட்டு விளையாட்டு வீரர்களை ஏறெடுத்துப் பார்க்காதது, இந்த ஒலிம்பிக்கின் விநோத செய்திகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

x