ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 96 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்குள் தொடர்ந்து 4வது முறையாக நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
மேற்கிந்திய தீவில் நடந்து வரும் 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலியாவும் களகண்டனது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆங்கிரிஷ் ரகுவன்சி, ஹர்னூர் சிங் களமிறங்கினர். ரகுவன்சி 6 ரன்னிலும், ஹர்னூர் சிங் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 12.3 ஓவர்களில் 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷேக் ரஷித், கேப்டன் யாஷ் துல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்ததுடன் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். அதன்பின், அபாரமாக விளையாடி ஷேக் ரஷித் 108 பந்தில் 94 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். கேப்டன் யாஷ் துல் அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். 110 பந்தில் 110 ரன் விளாசிய யாஷ் துல், 10 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். பின்னர் வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 13 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து 12 ரன், விக்கெட் கீப்பர் தினேஷ் பானா 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜேக் நிஸ்பட், வில்லியம் சல்ஸ்மேன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக லச்லன் ஷா 51 ரன் எடுத்தார். இதனால் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் விக்கி ஆஸ்ட்வால் 3 விக்கெட், ரவிகுமார் மற்றும் நிஷாந் சிந்து தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்மூலம், இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்குள் தொடர்ந்து 4வது முறையாக நுழைந்துள்ளது.
மற்றொரு அரைஇறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணி கடைசியாக 1998-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.