கலகலத்துப்போன இந்திய அணி... காப்பாற்ற என்ன வழி?


கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில், 2021 ஜனவரி 19-ல் நிறைவடைந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றது. 2-1 என்கிற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இது, இந்திய கிரிக்கெட்டை சர்வதேச அளவில் மீண்டும் ஒருமுறை தலைநிமிர வைத்தது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று சர்வதேச கிரிக்கெட் அறிஞர்களால் புகழப்பட்டது. உலகக் கோப்பையை வென்றதற்கு இணையான, அல்லது அதைவிட அதிகமான புகழை இந்திய அணிக்குப் பெற்றுத்தந்த இந்தத் தொடர் நிறைவடைந்து ஓராண்டு ஆகிவிட்டதை, பலரின் ஃபேஸ்புக் மெமரீஸ் நினைவுபடுத்திக்கொண்டிருக்க, இந்திய அணியோ தென்னாப்பிரிக்காவில், 50 ஒவர் போட்டி தொடரின் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

முன்னதாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முதல் போட்டியில் மட்டுமே வென்று தொடரை இழந்துள்ளது. இந்த முறை இந்திய அணி மிக வலுவாகத் தோற்றமளித்ததும் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி அனுபவம் குறைந்த வீரர்களைக் கொண்டதாகவும் இருந்தது, காயத்தில் காரப்பொடி கொட்டிய உணர்வைத் தந்துள்ளது.

அணித் தேர்வு சொதப்பல்கள்

டெஸ்ட் தொடரில் நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணி முதல் போட்டியை வென்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் தோற்றதற்கு, மட்டையாளர்கள் பலர் சொதப்பியதே முதன்மையான காரணம். டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை மட்டையாளர்களாக புஜாரா, ரஹானே இருவரும் பல போட்டிகளில் சொதப்பிவருகிறார்கள். அதையும் தாண்டி அவர்களுக்குத் தொடர்ந்து அணியில் வாய்ப்பளிக்கப்படுவதற்கான விலையை இந்தியா இந்தத் தொடரில் அளித்தது என்பதே, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த கருத்து.

50 ஓவர் தொடரைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரிலும் முந்தைய ஒருநாள், டி-20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணியின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய இளம் வீரர்கள் பலர், 20 பேர்கொண்ட ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தனர். 2021 ஐபிஎல் போட்டியில், தன் அதிரடி பேட்டிங்கால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த தமிழர் வெங்கடேஷ் ஐயருக்கு, முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஒரே ஒரு ஐபிஎல் தொடரில் சாதித்திருப்பதை வைத்து, அவருக்கு சர்வதேச 50 ஓவர் போட்டியில் வாய்ப்பளித்திருப்பது குறித்து கேள்வி எழுந்தது. அவரைப் போல், மட்டைவீச்சுடன் மிதவேகத்தில் பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் அணிக்கு மிகவும் அவசியம் என்று அவருடைய தேர்வை நியாயப்படுத்தினார் கேப்டன் கே.எல்.ராகுல். ஆனால், முதல் போட்டியில் அவருக்குப் பந்துவீச வாய்ப்பே வழங்கப்படவில்லை. இரண்டாம் போட்டியில் அவர் விக்கெட் எதையும் எடுக்கவில்லை. இரண்டு போட்டிகளிலும் மட்டையாளராகவும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவில்லை.

சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் உள்ளிட்ட அனுபவம் மிக்க, கூடுதல் சாதனைகள நிகழ்த்திய வீரர்களுக்குக் கடைசி போட்டியில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் இருவரும் அதிரடியாக மட்டைவீசி முறையே 39, 54 ரன்களை அடித்து அணியை வெற்றியின் விளிம்புக்கு அழைத்துச் சென்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் போட்டியை வெல்வதற்கு முக்கிய பங்களித்த தொடக்க மட்டையாளரும் அதிரடி ஆட்டக்காரருமான ருதுராஜ் கெய்க்வாடுக்கு, ஒரு போட்டியில்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் வழக்கம்போல் பிசிசிஐயின் அணித் தேர்வு சொதப்பல்களும் அதற்குப் பின்னால் உள்ள திரைமறைவுக் கணக்குகளும் விவாதப் பொருள் ஆகின.

தொடக்கத்தின் போதாமைகள்

இந்த ஒருநாள் தொடரில் கேப்டனாக இருந்திருக்க வேண்டிய தொடக்க மட்டையாளர் ரோஹித் ஷர்மா, காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் இல்லாததால் கேப்டன் பதவி வகித்தார் கே.எல்.ராகுல். மூன்று போட்டிகளிலும் தொடக்க மட்டையாளராகக் களமிறங்கிய அவர், இரண்டாம் போட்டியில் மட்டுமே ஓரளவு பங்களித்தார். அதுவும் 79 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களை அடித்தாலும் இறுதிவரை நிலைக்காமல் அவுட்டானது விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, 50 ஓவர் போட்டிகளில் ராகுல் இடைவரிசையில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

2019 உலகக் கோப்பையில் பாதியில் விலக நேர்ந்த ஷிகர் தவன், தென்னாப்பிரிக்காவுடனான தொடரின் முதல் போட்டியிலும் மூன்றாம் போட்டியிலும் முறையே 79, 61 ரன்களைக் குவித்து நம்பிக்கை அளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டனாக அல்லாமல் களமிறங்கிய கோலி, முதல் மற்றும் மூன்றாம் போட்டிகளில் அரை சதங்கள் அடித்தாலும் அனுபவம்மிக்க உலகத் தரம்வாய்ந்த மட்டையாளரான அவர், இறுதிவரை களத்தில் நின்று வெற்றியைப் பெற்றுத் தராதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தவிர, மிக மெதுவாக விளையாடியது, எளிய பந்துகளைக் கூட அடிக்காமல் விட்டது, பந்துகளைத் தவறாக ஊகித்து அடிக்க முயன்று அவுட்டானது எல்லாம் ரசிகர்களைத் திகைக்கச் செய்தன. அவருடைய விளையாட்டு வாழ்வின் உச்சநிலைக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு, இந்தத் தொடரில் அவருடைய மட்டைவீச்சு அமைந்திருந்தது.

இலக்கற்ற இடைவரிசை

இடைவரிசையில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் சற்றே அனுபவம் வாய்ந்த மட்டையாளரான ஷ்ரேயாஸ் ஐயரும் மூன்று போட்டிகளிலும் அணியை தத்தளிப்பிலிருந்து மீட்கத் தவறினர். விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், இரண்டாம் போட்டியில் 85 ரன்களை அடித்தாலும் அவரை ஒரு நம்பிக்கைக்குரிய மட்டையாளராகக் கருத முடியவில்லை. விளைவைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், அடித்து ஆடும் பாணியை அவர் பின்பற்றுவதே இதற்குக் காரணம். அதனால்தான், அவரால் அவ்வப்போது அதிக ரன்களைக் குவித்துவிட முடிகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இந்தியாவின் இடைநிலை மட்டையாளர் வரிசை மிகவும் வலுவற்றதாக இருப்பதை, தென்னாப்பிரிக்கத் தொடர் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளது. முன்பெல்லாம் 50 ஒவர் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்திய அணியில் இடைநிலை மட்டையாளர்கள் வரிசை பெரும்பாலான நேரம் பலவீனமானதாகவே இருந்தது. புத்தாயிரத்தில் யுவராஜ் சிங், முகமது கைஃப், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வருகைக்குப் பிறகே, இந்த நிலை மாறியது. அண்மைய ஆண்டுகளில் மீண்டும் இடைநிலை மட்டையாளர் வரிசை மீண்டும் தொடர்ச்சியாகச் சரிவடைந்துவருகிறது. ஐபிஎல் போன்ற போட்டிகளின் மூலம் நாட்டின் பல்வேறு மூலைமுடுக்குகளிலிருந்து மிகச் சிறந்த திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டுவரும் சூழலில், இந்தப் பிரச்சினை தொடர்வது வேதனைக்குரியது.

பந்துவீச்சு பிரச்சினைகள்

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் இருந்தாலும் ஜஸ்ப்ரீத் பும்ராவைத் தவிர, வேறு யாரும் தொடர்ந்து பங்களிக்கக்கூடியவர்களாக இல்லை. அனுபவம்மிக்க முகமது ஷமியை, 50 ஒவர் தொடரில் தேர்வாளர்கள் சேர்க்கவில்லை. பெரும்பாலான போட்டிகளில் பொறுப்பின் சுமையை பும்ரா ஒற்றையாகச் சுமக்க வேண்டியிருந்தது. புவனேஸ்வர் குமாரின் வேகம் அந்நிய ஆடுகளங்களுக்குப் போதுமானதாக இல்லை. முகமது சிராஜ், ஷார்துல் தாகுர், நவ்தீப் சைனி உள்ளிட்ட இளம் வீரர்கள் 50 ஓவர் வடிவத்தில் இன்னும் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பெறவில்லை. சுழல்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஓவர் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வினும், யுஸ்வேந்திர சஹலும் எதையும் சாதிக்கவில்லை.

அணியை வழிநடத்த வேண்டிய பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இந்திய அணியில், தற்போது பகுதிநேரப் பந்துவீச்சாளர் இல்லை. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட மட்டையாளர்கள் அணிக்குத் தேவைப்படும்போது பந்துவீசவும் தயாராக இருந்தனர். திடீரென்று பந்து வீசுபவர்களை எதிரணி மட்டையாளர்கள் கணிப்பது கடினம் என்பதால், அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க விக்கெட்களும் கிடைத்தன. சில நேரங்களில் 50 ஓவர் போட்டிகளில் இவர்களின் பந்துவீச்சே, இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டுள்ளது. இப்போது, இந்திய அணியின் மட்டையாளர் யாரும் பந்தைக் கையில் எடுப்பதில்லை என்பதும் இந்திய அணி பலவீனமடைந்திருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

தலைமைகளின் பொறுப்பு

இந்தியாவின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரும் பயிற்சியாளராக 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான இந்திய அணியை உலகக் கோப்பையை வெல்ல வைத்தவரும், இந்திய அணிக்குப் பல திறமையான இளைஞர்களைத் தயார்படுத்தியவருமான ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது. அவர், அந்தப் பதவியை ஏற்ற முதல் தொடர் இப்படி படுதோல்வியில் முடிந்திருக்கிறது. ஒரே ஒரு தொடரை வைத்து இந்தப் பதவிக்கான அவருடைய தகுதியை கேள்வி எழுப்பிவிட முடியாது. அதேநேரம் அணித் தேர்வு சொதப்பல்களுக்கு டிராவிட் மீதும் விமர்சனக் கணைகள் ஏவப்பட்டன.

முதல் 3 மாதங்களுக்கு அணித் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் பெரிதாகத் தலையிடாமல், என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து அணியின் தன்மையை முழுமையாக உள்வாங்குவதற்குச் செலவிடப் போவதாக டிராவிட் கூறியிருந்தார். ஆனால், இந்தத் தொடரின் முடிவு அவர் விரைவில் அணி மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைக் காண்பித்துள்ளது. விராட் கோலி திடீரென்று 3 வடிவங்களிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விலக நேர்ந்துவிட்டது. மட்டையாளராக அனுபவம் பெற்றிருக்கும் ரோஹித் ஷர்மா கேப்டன் பதவிக்கு ஒப்பீட்டளவில் புதியவர். டெஸ்ட் அணிக்கு யார் நிலையான கேப்டனாக்கப்படப் போகிறார் என்பதே இன்னும் தெளிவாகவில்லை. இந்தச் சூழலில், இந்திய அணி வலுவான கேப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. அணியை வழிநடத்த வேண்டிய பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவர்களும் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு அணியைச் சரிவிலிருந்து மீட்டு வெற்றிப் பாதையில் வழிநடத்த வேண்டும்!

x