இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான யுவராஜ் சிங்குக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங், மற்ற அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார். 2011 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங்குக்கு பெரும் சோகம் காத்திருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்து விளையாடினார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இதனிடையே, 2016-ம் ஆண்டு ஹேசல் கீச் என்பவரை யுவராஜ் சிங் மணந்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள யுவராஜ் சிங் தம்பதி, “எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், இன்று கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசிர்வதித்தார் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசிர்வாதத்துக்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். மேலும் சிறியவரை உலகுக்கு வரவேற்கும்போது எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க விரும்புகிறோம். காதல், ஹேசல் மற்றும் யுவராஜ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், யுவராஜ் சிங்குக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், விவிஎஸ் லக்ஷ்மண், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். யுவராஜின் தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான யோகராஜ் சிங் தனது பேரனை ‘சாம்ப்’ என்று குறிப்பிட்டுள்ளர்.