வலு தூக்கும் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம்: அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தில் இலக்கியா!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர். பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ். கிருஷ்ணமூர்த்தி - சித்ரா தம்பதியினரின் மகள் கே. இலக்கியா (22), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் (Powerlifting) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்.

இந்நிலையில், எதிர்காலத்தில் காமென்வெல்த் போட்டியில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை தேடித் தரவேண்டும் என்ற இலக்கை நோக்கி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இலக்கியா.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இலக்கியா, “கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தேன். பள்ளிகளில் படிக்கும்போதே தடகளம் மற்றும் கோ-கோ போட்டிகளில் மாவட்ட, மாநிலளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். வலு தூக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் பள்ளிக் காலம் முதல் இருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். சேலத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் பயிற்சியாளர் பொன். சடையன் எனக்குப் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தர பிரதேசம் வாராணசியில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதால் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டிக்குத் தகுதி பெற்றேன். இதன்படி இந்திய வலுதூக்கும் சம்மேளனம் மற்றும் துருக்கி வலுதூக்கும் சம்மேளனம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் 31-ம் தேதி வரை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ‘ஆசியன் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் - 2021’ போட்டியில் ஜூனியர் 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றேன். இதில் ஸ்குவாட் பிரிவில் 132.5 கிலோ, பெஞ்ச் பிரஸ் பிரிவில் 72.5 கிலோ, டெட்லிஃப்ட் பிரிவில் 142.5 கிலோ என மொத்தம் 374.5 கிலோ வலு தூக்கி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வெற்றேன்” என்றார்.

மேலும், “வருங்காலத்தில் இந்தியா சார்பில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று நமது நாட்டிற்குத் தங்கப்பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதே இலக்கு. இதற்காகத் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது லட்சியப் பயணத்துக்கு எனது பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்” என்றார் இலக்கியா.

மகள் இலக்கியாவின் வெற்றி குறித்து தந்தை எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “சிறு வயது முதலே இலக்கியா விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். தற்போது ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பெருமை தேடித்தந்துள்ளார். அது எங்களுக்குப் பெருமிதம் தருகிறது. இலக்கியாவுக்கு மேலும் பல வெற்றிகள் குவியும் என்று நம்புகிறோம். ஒலிம்பிக் போட்டியில் வலு தூக்கும் விளையாட்டையும் சேர்த்தால் இந்தியாவிலிருந்து இன்னும் அதிக வீரர்களை உருவாக்க முடியும்" என்றார். அத்துடன், “விளையாட்டில் ஜொலிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

x