தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தனது தலைமையிலான இந்திய அணி இழந்ததால், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், 2 மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றன.
கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். “இவ்வளவு நீண்ட காலத்துக்கு அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக பிசிசிஐக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஒரு கேப்டனாக என்னை நம்பி, இந்திய கிரிக்கெட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய திறமையான தனிநபராக என்னைக் கண்டறிந்த தோனிக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
கோலியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கெனவே டி20, ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.