இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கேப்டவுடனில் நடந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. 13 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரிஷப் பண்ட் 100 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வேறு சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்டந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 29.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து, இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 63.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 212 ரன்களை தென் ஆப்பிரிக்கா அணி எட்டியது.
தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் நங்கூரமாக நின்று 82 ரன்கள் விளாசினார். இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் தன் வசப்படுத்தியது. வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைக்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.