லாடர்கில்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்கில் நகரில் ‘டி’ பிரிவில் இலங்கை - நேபாளம் அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை காரணமாக இந்த ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் இலங்கை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கடினமாகி உள்ளது.
3 ஆட்டங்களில் விளையாடி உள்ள இலங்கை அணி 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் எனஒரே புள்ளியை மட்டும் பெற்று தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக்ஆட்டத்தில் வரும் 17-ம் தேதி நெதர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே இலங்கை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரியும்.
இதற்கிடையே இலங்கை - நேபாளம் அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் ‘டி’ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த பிரிவில் மீதம் உள்ள 4 அணிகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே அதிகபட்சமாக 6 புள்ளிகளை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.