கரூரில் அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை கூடைப்பந்து போட்டி மே 22-ல் தொடக்கம்


பிரதிநிதித்துவப் படம்

கரூர்: கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 64-வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் பெண்களுக்கான 10-வது கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வரும் மே 22-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்ட கூடைப் பந்து கழக தலைவர் வி.என்.சி.பாஸ்கர் மற்றும் செயலாளர் எம்.முகமது கமாலுதீன் ஆகியோர் கூறியது: “மே 22-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் ஏ.ஜெ.மார்ட்டின் சுதாகர், கரூர் துணைமேயர் ப.சரவணன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.

ஆண்கள் போட்டியில் ஏ மற்றும் பி பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் 8 அணிகள் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். 26-ம் தேதி கால் மற்றும் அரை இறுதி போட்டிகளும், 27-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும். வெற்றிப் பெறும் அணிக்கு எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் முதல் பரிசு ரூ.1,00,000, 2-வது பரிசு ரூ.80,000, 3-வது பரிசு ரூ.60,000, 4-வது பரிசு ரூ.50,000 வழங்கப்படும்.

பெண்களுக்கான போட்டியில் 4 அணிகள் பங்கேற்கின்றன. லீக் முறையில் போட்டிகள் நடைபெறும். முதல் பரிசாக ரூ.75,000, 2-ம் பரிசாக ரூ.40,000, 3-ம் பரிசாக 30,000, 4-ம் பரிசாக ரூ.20,000 வழங்கப்படும். போட்டியில் 18 சர்வதேச வீரர்கள், 57 தேசிய வீரர்கள், 10 சர்வீசஸ், 14 மாநில வீரர்கள், 16 ரயில்வே வீரர்கள் என மொத்தம் 115 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஆண்கள் போட்டியில் 78, பெண்கள் போட்டியில் 37 பேர் பங்கேற்கின்றனர். போட்டிகளில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் கிடையாது” என தெரிவித்தனர்.