பி.எம்.சுதிர்
sudhir.pm@hindutamil.co.in
இந்திய கிரிக்கெட் அணிக்கு, ஆஸ்திரேலியாவில் ஆடுவது என்றாலே அலர்ஜி. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான அந்நாட்டில், நம்மவர்களால் அதிகம் வெற்றிபெற முடியாது என்பதே அதற்குக் காரணம். இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘டி-20’ தொடரை அவர்களின் மண்ணிலேயே வென்றிருக்கிறது இந்தியா. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தவர் தமிழகத்தின் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டி.நடராஜன் என்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.
ஐபிஎல் தந்த அறிமுகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கும்வரை கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு நடராஜனைப் பற்றித் தெரியாது. வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர்தான் நினைவுக்கு வருவார்கள். அதிலும் பேட்ஸ்மேனின் காலடியைக் குறிவைத்து யார்க்கர் பந்துகளை வீசும் பும்ராதான் இந்திய ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாக இருந்தார். இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல்லில் களம் இறங்கினார் நடராஜன். ஒரு போட்டியில் அடுத்தடுத்து யார்க்கர்களை வீசி, பும்ராவை நடராஜன் விஞ்ச... எல்லோரின் பார்வையும் அவர் மீது விழுந்தது. இதனால், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்காகக் களம் இறங்கிய 2 மாதங்களிலேயே இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நடராஜன்.