விக்டரி கொடுப்பாரா விராட் கோலி?


பி.எம்.சுதிர்
sudhir.pm@thehindutamil.co.in

தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. இந்தியாவில் அடுத்த 2 மாதங்களுக்கு கிரிக்கெட் திருவிழாதான். காபி ஷாப்கள் முதல் தெருவோர டீக்கடைகள் வரை விராட் கோலியின் தலையைத்தான் உருட்டப்போகிறார்கள்.

1983-ல் கபில்தேவும், 2011-ல் தோனியும் செய்த மாயாஜாலத்தை 2019-ல் விராட் கோலி நிகழ்த்துவாரா என்ற விவாதம் பட்டிதொட்டியெல்லாம் நடக்கும். உலகக் கோப்பையை வென்றுவந்தால் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்வார் விராட் கோலி. தோற்றுப் போனாலோ, அணியின் எல்லாத் தவறுகளுக்கான பழியும் அவர் தலையில்தான் விழும்.

ஒருபக்கம் கேப்டனுக்கான பொறுப்புகள், மறுபக்கம் சிறந்த பேட்ஸ்மேனுக்கான கடமைகள் என்று ஒரே நேரத்தில் 2 சுமைகளை சுமக்க வேண்டிய நிலை கோலிக்கு. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வரும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அடித்த ரன்கள் 4,306. இதில் சதங்கள் மட்டுமே 19. ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் தொடர்ந்து நம்பர் ஒன்னாக இருக்கும் கோலி, உலகக் கோப்பையிலும் தன் அதிரடியை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்வார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

x