பி.எம்.சுதிர்
கிரிக்கெட்டில் இது விராட் கோலியின் யுகம். ஆஸ்திரேலிய தொடருக்கு முன்புகூட எல்லோரும் கோலியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் கோலியை முடக்குவதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க, திடீர் புயலாய் அவர்களைத் தாக்கி, இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரை வென்று கொடுத்துள்ளார் சேதேஷ்வர் புஜாரா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் புஜாரா எதிர்கொண்ட பந்துகள் மட்டும் 1,258. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இவர். இதற்கு முன்னர் கடந்த 2003-2004-ல் நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் திராவிட் 1,203 பந்துகளைச் சந்தித்ததே சாதனையாக இருந்தது. இத்தொடரில் 3 போட்டிகளில் சதம் அடித்ததுடன் 521 ரன்களையும் குவித்துள்ள புஜாரா, இதற்காக 1,702 நிமிடங்கள் (அதாவது 28 மணிநேரம் 22 நிமிடங்கள்) நீடித்து நின்று பேட்டிங் செய்துள்ளார். இவருக்கு அடுத்து இந்த தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 350 தான் (ரிஷப் பந்த்) என்பதே ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்வது எத்தனை கடினமான விஷயம் என்பதை உணர்த்திவிடும். இத்தொடரில் இந்தியா வென்றதற்காக தொடர் நாயகன் விருதை பெற்றுள்ள புஜாரா, இந்திய அணிக்கு தான் ஒரு புதிய பேட்டிங் பெருஞ்சுவர் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சத்தமில்லாமல் சாதித்து வரும் சேதேஷ்வர் புஜாரா. இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில், குவித்த ரன்கள் 5,426. சராசரி ரன்கள் 51.18. இவரது தந்தை அரவிந்த் புஜாராவும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். சவுராஷ்டிரா அணிக்காக 6 போட்டிகளில் ஆடி 172 ரன்களை எடுத்துள்ள அவரால், அதற்கு மேல் கிரிக்கெட்டில் சிறகடித்துப் பறக்க முடியவில்லை.