கனவுகளை விடாமல் துரத்துங்கள்... - சொல்கிறார் கிரிக்கெட் கோடீஸ்வரர்!


பி.எம்.சுதிர்

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. சேதேஷ்வர் புஜாரா, மனோஜ் திவாரி, மெக்கல்லம், ஹசிம் ஆம்லா போன்ற ஜாம்பவான்கள் விலை போகாமல் நிற்க, யுவராஜ் சிங், இஷாந்த் சர்மா போன்றவர்கள் சொற்ப விலைக்கு ஏலம் போக, வருண் சக்ரவர்த்தி, 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறார். 27 வயதான வருணுக்காக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படை விலையைவிட (ரூ.20 லட்சம்) 42 மடங்கு அதிக விலை கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!

ஓவர் நைட்டில் குரோர்பதி ஆன கொண்டாட் டத்தில் இருக்கிறார் வருண். “தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணிக்காக ஆடிய எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் வலைப் பயிற்சியின்போது பந்துவீசும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் காரணமாக இந்த முறை ஐபிஎல்லில் என்னை யாராவது ஏலம் எடுப்பார்கள் என்று நம்பினேன். ஆனால், இந்த அளவுக்கு என்னை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” நெகிழ்கிறார் வருண்.

சுழற்பந்து வீச்சில் ஆஃப் பிரேக், லெக் பிரேக், கேரம் பால், கூக்ளி, பிளிப்பர், டாப் ஸ்பின்னர், ஸ்லைடர் என்று 7 வகைகளில் பந்துவீசி பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கக் கூடியவர் என்பதால்தான் இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நடந்திருக்கிறது. இத்தனைக்கும், சிறு வயதில் இருந்தே இவர் சுழற்பந்து வீச்சில் பயிற்சி பெற்றவர் கிடையாது. 13 வயதில் கிரிக்கெட் விளையாட வந்த இவர், ஆரம்பத்தில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகத்தான் இருந்தார். 17 வயது வரை கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த இவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.
கிரிக்கெட்டில் உயரத்தை எட்ட முடியா ததால், அதற்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஆர்கிடெக்ட் படித்தவர் பின்னர் ஃப்ரீலான்ஸ் கட்டிட வல்லுநராகத் தன் பயணத்தைத் தொடங்கி னார். வசதி வாய்ப்புகள் வந்தாலும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் துரத்த, 25 வயதில் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் வந்தார் வருண். கிளப்களுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார்.

x