வேட்டைக்குப் புறப்படும் தங்க மகன்கள்!


ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கங்களை வேட்டையாட, விளையாட்டு வீரர்களின் பெரும் படையொன்று ஜகார்த்தாவை நோக்கிப் புறப்படவிருக்கிறது. இந்தப் படையில் உள்ள முக்கிய வீராங்கனைகளைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில், படையின் முக்கிய வீரர்களைப் பற்றி ஒரு பார்வை:

அனுபவத்தின் பின்னணியில் சுஷில் குமார்

இந்தியாவின் மற்ற எந்த விளையாட்டு வீரருக்கும் இல்லாத பெருமை சுஷில் குமாருக்கு உண்டு. அடுத்தடுத்த 2 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீரர் என்பதே அந்தப் பெருமை. ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டி, ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப் எனப் பல போட்டிகளில் தங்கப் பதக்கங்களை அள்ளியுள்ளார். இருப்பினும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தைத்தான் இவரால் வெல்ல முடிந்துள்ளது.

இம்முறை தங்கம் வெல்லும் கனவுடன் இவர் ஜகார்த்தாவில் களம் இறங்குகிறார். 35 வயது மூத்த வீரரான சுஷில் குமார், தனது நீண்ட அனுபவத்தின் மூலம் அந்தக் கனவை நனவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோல்ட் கோஸ்ட் நகரில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இவர் 80 விநாடிகளிலேயே எதிராளியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது. இவரது தங்கக் கனவுக்கு சவாலாக கிர்கிஸ்தான், கசகஸ்தான் மற்றும் மங்கோலிய வீரர்கள் இருப்பார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

x