கால்பந்திலிருந்து தடகளத்துக்கு...- ஹிமா தாஸ் தங்கம் வென்ற சீக்ரெட்!


அசாமின் குவாஹாட்டி நகரிலிருந்து 140 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது கந்துளிமாரி கிராமம். இதுதான் தடகள வீராங்கனை ஹிமா தாஸின் சொந்த ஊர். இங்கே, மாடுகள் மேயும் மைதானம் ஒன்று உள்ளது. சேறும் சகதியுமாய் கிடக்கும் இந்த மைதானத்தில் ஓடி பயிற்சி எடுத்துத்தான் இன்று பின்லாந்தில் நடந்த தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்திய தேசத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறார் ஹிமா தாஸ்!

ஹிமா தாஸின் அப்பா ரொஞ்சித் தாஸ் ஒரு ஏழை விவசாயி. 40 சென்ட் நிலத்துக்கு மட்டுமே சொந்தக்காரரான இவர், உபரி வருமானம் ஈட்ட உள்ளூர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். தினமும் கால்பந்து பயிற்சிக்குச் செல்லும்போது, ஹிமா தாஸையும் அழைத்துச் செல்வார். மைதானத்தில் சிறுவர்கள் கால்பந்து ஆடுவதைப் பார்த்து ஹிமா தாஸுக்கும் விளையாட்டு ஆர்வம் துளிர்விட்டது. இதைப்பார்த்த ரொஞ்சித் தாஸ், மகளுக்கும் பயிற்சிகளைத் தொடங்கினார்.

கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டுமானால் ஓட்டமும் அவசியம் என்பதை உணர்ந்த ரொஞ்சித் தாஸ், காலையும் மாலையும் மகளை கிராமத்தில் உள்ள மைதானத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தார். இப்படித்தான் ஹிமா தாஸ் ஓட்டப்பந்தயத்துக்கு அறிமுகமானார். 2 ஆண்டுகளுக்கு முன்புவரை கால்பந்தில் மட்டுமே ஹிமாவின் கவனம்இருந்தது. கால்பந்தில் மாவட்ட அளவிலான அணியில் இடம் பிடிப்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. இந்த நிலையில்தான், சம்சுல் ஹக் என்ற ஆசிரியர் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் ஹிமா தாஸ் ஆடுவதைப் பார்த்துள்ளார். ஒவ்வொரு முறையும் தன்னிடம் பந்து கிடைத்தும் மின்னல் வேகத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த அவருக்குள் பொறி தட்டியது. ‘இந்த அளவுக்கு வேகமாக ஓடும் பெண்ணுக்கு பயிற்சி அளித்தால், ஓட்டப் பந்தயத்தில் இன்னும் சிறப்பாக வருவாளே’ என்ற எண்ணம் அவருக்குள் துளிர்விட, ஹிமாவை மாநில தடகள சங்க நிர்வாகிகளிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு ஹிமாவை ஓடவைத்து அவர்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை ஓட்டத்தில் ஹிமாவின் ஓட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர் நிப்பான் தாஸ் வியந்து போனார். இத்தனை நாட்களாக இவரைப் போன்ற வீராங்கனைக்காகத்தானே காத்திருந்தோம் என்று உற்சாகமானவர், ஹிமா தாஸை குவாஹாட்டியில் உள்ள பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று தடகளப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.

x