கோப்பையைக் கோட்டைவிட்ட மெஸ்ஸி- மீண்டும் வருவாரா...ஓய்வு பெறுவாரா..?


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தோற்று, வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால் எப்படி இருக்கும்? இப்போது அதே போன்ற நிலையில்தான் இருக்கிறது உலகக் கோப்பை கால்பந்து. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதியைக்கூட எட்டாத நிலையில், பெல்ஜியம், ரஷ்யா அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

அணிகளின் நிலைதான் இப்படியென்றால், இந்த உலகக் கோப்பையின் கதாநாயகனாக வர்ணிக்கப்பட்ட அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸியின் நிலை அதைவிடப் பரிதாபம். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஐந்து முறை வென்றவர், அர்ஜென்டினாவுக்காக அதிக கோல்களை அடித்தவர், கிளப் கால்பந்தில் நூற்றுக்கணக்கான கோல்களைக் குவித்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட மெஸ்ஸி, இம்முறை கோப்பையை அர்ஜென்டினாவுக்குச் சொந்தமாக்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தின் மோசமான க்ளைமாக்ஸைப் போல இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் இமேஜ் தகர்ந்து போனது!

ஐஸ்லாந்து அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 12 யார்டுகள் (36 அடிகள்) தூரத்தில் இருந்து அடிக்கக்கூடிய பெனாலிடி கிக்கையே கோலாக மாற்ற முடியாமல் மெஸ்ஸி திணற, அர்ஜென்டினா ஆடிப்போனது. முதல் சறுக்கலில் இருந்து அவர் சுதாரித்து எழுவதற்குள், 2-வது சுற்றுப் போட்டியில் பிரான்ஸிடம் பரிதாபமாகத் தோற்றது அர்ஜென்டினா. கோல்மழை பொழிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி, வெறும் ஒரு கோல் மட்டும் அடித்து கால் உடைந்தவரைப்போல் சொந்த ஊர் திரும்பினார். ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக வழியனுப்பி வைக்கப்பட்டவர் அடுத்தவருக்குத் தெரியாமல் ஊர் போய்ச் சேர்ந்தார். பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்காமல் வீட்டுக்குத் திரும்பினார்.

அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றமாய் மாற, அர்ஜென்டினா ரசிகர்களே மெஸ்ஸியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். “அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால் பார்சிலோனா கிளப்புக்காக உயிரைக் கொடுத்து ஆடும் மெஸ்ஸி, அதில் பாதி ஆற்றலைக்கூட அர்ஜென்டினாவின் வெற்றிக்காகப் பயன்படுத்தியதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு முதல் அர்ஜென்டினாவுக்காக ஆடிவரும் மெஸ்ஸி, ஒரு கோப்பையைக்கூட நாட்டுக்காக வாங்கிக் கொடுக்கவில்லை என்பது அவர்களின் ஆதங்கம். 4 உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் ஆடியுள்ள இவர், ஒரு முறைகூட நாக் அவுட் சுற்றில் கோல் அடிக்கவில்லை என்பதை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள் அவர்கள்.

x