பாரதப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்தில் நின்றதாகச் சொல்வார்கள். ஆனாலும், முக்கிய களம் என்னவோ அர்ஜுனனுக்கும் - கர்ணனுக்கும் இடையில்தானே! அதுபோலத்தான் நூற்றுக்கணக்கான வீரர்கள் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொண்டாலும், போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் - அர்ஜென்டினா வீரர் லயொனல் மெஸ்ஸிக்கும் இடையில் தான் முக்கிய போட்டி. தங்களில் சிறந்த வீரர் யார் என்பதை நிரூபிக்க இவர்கள் இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
இவர்களில் உலகக் கோப்பையில் முதலில் களத்தில் இறங்கியவர் ரொனால்டோ. முன்னாள் சாம்பியனான பலம்வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக, குறிப்பாக உலகின் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக கருதப்படும் டேவிட் டீ குயாவுக்கு எதிராக சோச்சி நகரில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ரொனால்டோவை மட்டுமே நம்பி போர்ச்சுக்கல் களம் இறங்கியது. ரொனால் டோ கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் இந்த முதல் போட்டியில் பங்கேற்றார். இதற்குக் காரணம் அவருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கு.
போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான ரொனால்டோ, ஸ்பெயினின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர், முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் அரசு அவர் மீது வரி ஏய்ப்பு வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த நிலையில், வருமானவரித் துறையுடன் சமரச தீர்வு காண்பதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்த ரொனால்டோ ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. (ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
இந்தச் சம்பவம் நடந்த 2 நாட்களுக்குள் ஸ்பெயின் அணிக்கு எதிராகவே தனது அணியை வழிநடத்த வேண்டிய நிலை ரொனால்டோவுக்கு. இந்த மனச்சோர்வால் ரொனால்டோ மைதானத்தில் பதறி நிற்பாரோ என்று ரசிகர்கள் கலங்கி நிற்க, அதற்குக் கொஞ்சம்கூட இடம் கொடுக்காமல் மைதானத்தில் கால்வைத்த விநாடி முதல், சிறுத்தையாய் சீறிப்பாய்ந்தார். 33 வயதான நிலையிலும் ஒரு இளம் வீரனுக்குரிய வேகத்தில் மைதானமெங்கும் வியாபித்து நின்ற ரொனால்டோ, ‘காலா’ ஸ்டைலில் ‘வேங்கையன் மகனாய்’ ஒற்றை ஆளாக ஸ்பெயினைத் துவைத்தெடுத்தார்.