மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய நொண்டியடித்துக் கொண்டிருக்க, கிழவர்களின் அணி என்று ஆரம்பத்தில் கேலியாக அழைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ, எகிறும் பெட்ரோல் விலையாட்டம் அடுத்தடுத்து புள்ளிக்கணக்கை ஏற்றிக்கொண்டு ராஜ நடைபோட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது!
சென்னை அணியின் இந்த இமாலய வெற்றிக்கு முதுகெலும்பாய் இருக்கிறார் அம்பாட்டி ராயுடு. சென்னை அணியின் ‘பாகுபலி’ என்று செல்லமாய் அழைக்கப்படும் இவர், கடந்த 13-ம் தேதி வரை 12 போட்டிகளில் ஆடி 500 ரன்களைக் கடந்து பீடுநடை போடுகிறார். அத்துடன் டி20 போட்டிகளில் ஆடும் இந்திய அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.
அதிரடி பேட்டிங், விக்கெட் கீப்பிங், சுழற்பந்துவீசும் திறமை என்று பல வித்தைகளைக் கற்று வைத்திருக்கும் இவர், 32 வயதைக் கடந்த நிலையிலும் அறிமுகவீரரைப் போல்தான் நடத்தப்படுகிறார். இதற்கெல்லாம்காரணம் இவரது முன் கோபம். அந்தக் கோபத்தின்காரணமாகப் பல விஷயங்களை இழந்துள்ளார்.
எல்லா ஆட்டக்காரர்களையும் போலவே இளமையையிலேயே கிரிக்கெட் உலகில் சாதனைகளைப் படைத்தவர்தான் அம்பாட்டி ராயுடு. 1985-ம் ஆண்டு குண்டூரில் பிறந்த இவர், அப்பா சாம்பவசிவ ராவ் தந்த உற்சாகத்தால் கிரிக்கெட் உலகில் கால் பதித்தார்.