பின்னியெடுக்கும் பிரித்வி ஷா! - ஜூனியர் டெண்டுல்கர் வளர்ந்த கதை


நெரிசல் மிகுந்த மின்சார ரயில். கூட்டத்தில்  நெருக்கியடித்து நின்றுகொண்டிருக்கும் அப்பா. அவரது தோளில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கும் சிறுவன். அந்தச் சிறுவனின் தோளில் அவனைவிடப் பெரிய கிரிக்கெட் கிட் - இப்படி வினோதமான ஒரு காட்சியை சில ஆண்டுகளுக்கு முன்புவரை மும்பைவாசிகள் பார்த்திருக்கக் கூடும். ஒருவேளை, இப்படிப் பயணிக்கும் அப்பாவையும் மகனையும் பார்த்து சிரித்திருக்கவும் கூடும்.

ஆனால், அன்று அப்பாவின் தோளில் ஒடுங்கியடி அப்படிப் பயணித்த சிறுவன்தான், இன்று ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசும் 18 வயது இளம் புயல் பிரித்வி ஷா!

அன்று கிரிக்கெட் பயிற்சிக்காக மகனை தினமும் 3 மணிநேரம் தோளில் தூக்கிச் சுமந்து சென்ற ஒரு தந்தையின் தியாகம்தான் இன்று, ‘ஜூனியர் டெண்டுல்கர்’ என்று எல்லோரும் புகழும் பிரித்வி ஷாவை நமக்குப் பெற்றுத்தந்துள்ளது.

எல்லா சிறுவர்களையும் போலத்தான் பிரித்வி ஷாவும் 3 வயதில் பிளாஸ்டிக் பேட் பிடித்து கிரிக்கெட் ஆடினார்.  அவர் அடித்த ஷாட்கள் அப்போதே சச்சினை ஞாபகப் படுத்துவதுபோல் இருக்கவே, ஏரியாவில் பிரபலமானார்.  ‘சச்சினைப் போலவே உன் மகனும்  கிரிக்கெட்டில் சிறப்பாக வருவான்’ என்று தெருவில் உள்ளவர்கள் புகழ, சந்தோஷத்தின் உச்சிக்கே போனர் பிரித்வியின் அப்பா  பங்கஜ் ஷா. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. பிரித்விக்கு 4 வயதாக இருந்தபோதே அவரது தாயார் காலமானார்.  மனைவி இறந்த துக்கத்தை பங்கஜ் ஷாவால் தாங்க முடியவில்லை. 

x