தொடங்கிவிட்டது ஐபிஎல் கிரிக்கெட். கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கி, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியும் களமிறங்கியிருக்கிறது. மைதானத்தில் மீண்டும் சிங்கமாகக் கர்ஜிக்கத் தொடங்கியிருக்கும் தோனி மற்றும் அணியினரைக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.
“இந்த ஐபிஎல்லில் தங்கள் அணிக்காக ஆட என்னைப் பலரும் அணுகினர். ஆனால், சென்னையைத் தவிர மற்ற அணிகளில் ஆடுவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை” என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கண்கலங்கியபடி சொன்னார் டோனி. அது, சிஎஸ்கே ரசிகர்களை நெகிழச்செய்துவிட்டது.
இதற்கு முன்னதாக தோனியின் தலைமையில் ஆடிய 8 ஐபிஎல் தொடர்களிலும் ‘ப்ளே ஆஃப்’ சுற்றை எட்டிய அணி என்ற பெருமையைக் கொண்டுள்ளது சிஎஸ்கே. இதில் 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரையும், 2010-ம்ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரையும் வென்று வாகை சூடியுள்ளது சென்னை.
“எல்லாம் சரி, முன்பு தோனியும் அவரது சகாக்களும் இளமைத் துடிப்புடன் இருந்தார்கள். இப்போது அப்படியல்ல. ஓய்வுபெறும் வயதை எட்டியிருக்கும் தோனி, அதிரடி ஆட்டத்தைக் குறைத்துள்ளார். ரெய்னா, பிராவோ, வாட்ஸன், ஹர்பஜன் சிங், முரளி விஜய் எனப் பலரும் 30 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். இள ரத்தங்களுக்கான டி20 போட்டியில் இப்படி மூத்த வீரர்களைக் கொண்டு வெற்றிகளைக் குவிக்க முடியுமா?” என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருக்கிறது.