ஒழுகும் கூரை வீடு, குதிரை வண்டி ஓட்டும் தந்தை, சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம், பெண்களைத் தனியாக வெளியே அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தும் சமூகம் இப்படி பல தடைகளைக் கடந்து இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார் ராணி ராம்பால்.
“ஹரியாணாவில் உள்ள ஷாஹாபாத் எனது ஊர். எங்கள் ஊரில் ஹாக்கி விளையாட்டு மிகப்பிரபலம். பலர் ஹாக்கி போட்டிகளில் ஆடி, இந்திய ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்து கை நிறைய சம்பாதித்தார்கள். அதுபோல் நாமும்ஹாக்கியில் பங்கேற்று ரயில்வேயில் சேர வேண்டும். அந்தப் பணத்தை வைத்து வீட்டைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
என் வீட்டருகே ஹாக்கி அகாடமி நடத்திவரும் பல்தேவ் சிங்கிடம் அதைச் சொன்னேன். அப்போது எனக்கு 6 வயதுதான் என்பதால் சேர்க்கத் தயங்கினார். ‘இன்னும் கொஞ்சம் பெரியவளானதும் சேர்த்துக்கொள்கிறேன்’ என்றார்.
சில நாட்கள் கழித்து மீண்டும் சென்றேன். அவர் மறுத்தார். சேர்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தேன். அது அவருக்குப் பிடித்துப்போக, அகாடமியில் எனக்கு இடம் கிடைத்தது” என்று தன் முன்கதையைக் கூறுகிறார் ராணி.