ஒரு தேசமே காத்திருக்கிறது!


ஜிம்னாஸ்டிக் என்றாலே ரஷ்யர்கள் நினைவுக்குவருவது தவிர்க்க முடியாதது. அதைத் தாண்டினால் மேற்கு நாடுகள். சீனா அதைக் கொஞ்சம் தகர்த்தது. ஆனால், இந்தியாவுக்கு நீண்ட காலமாக அது டேக்காதான் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை உடைத்து, சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் முதல் முறையாக சரித்திரம் படைத்திருக்கிறது இந்தியா. பெருமைக்குரியவர் ஹைதராபாதைச் சேர்ந்த அருணா ரெட்டி.

அருணாவின் இந்த வெற்றியில் அவரது அப்பா நாராயண ரெட்டியின் பங்கு அளப்பரியது. அக்கவுன்டன்ட்டாக இருந்த அவருக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகம். அவரது விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க ஆளே இல்லாமல் போய்விட்டது. ஆக, எல்லா தந்தையையும்போல, தன்னால் முடியாததைத் தன் மகனை வைத்துச் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், பிறந்த இருவருமே பெண் குழந்தைகள்.

“மகன் இல்லாவிட்டால் என்ன? என் மகள்களில் ஒருவரை மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக்கிக் காட்டுவேன்”  என்று கங்கணம் கட்டிக்கொண்டார். கிண்டர் கார்டன் அனுப்ப வேண்டிய வயதிலேயே, இளைய மகள் அருணாவை கராத்தே பயிற்சிக்கு அனுப்பினார்.

நண்பர்கள் “பெண் குழந்தைக்கு கராத்தே எதற்கு?” என்று கேட்டதை அவர் சட்டை செய்யவே இல்லை. தன் மகளால் நிச்சயம் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்று நம்பினார். பயிற்சியின்போது, மகளின் உடல் ரப்பராக வளைவதைக் கண்ட அவருக்கு, கராத்தேவைவிட ஜிம்னாஸ்டிக்கில் மகளால் அதிகம் சாதிக்க முடியும் என்று தோன்றியது. 2002-ல் மகளை ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்துவிட்டார். அப்போது அருணா யுகேஜி மாணவி.

x