முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து கல்லார் தர்காவுக்கு சீர்வரிசை வழங்கிய நாகை மீனவர்கள்!


நாகை: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து கல்லார் தர்காவுக்கு முதன் முறையாக சந்தனக்குடம் மற்றும் சீர்வரிசைகளை மீனவர்கள் வழங்கினர்.

நாகை மாவட்டம் கல்லாரில் உள்ள பிரசித்திபெற்ற மஹான் மலாக்கா சாகிபு என்ற முஹையதீன் ரிபாயி ஒலியுல்லா தர்காவின் 426ம் ஆண்டு கந்தூரி விழா ஏப்.4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் அங்குள்ள முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து, கல்லார் தர்காவுக்கு முதன் முறையாக சந்தனக்குடம், பட்டுப் போர்வை, பூ, பழம், வெத்தலை, பாக்கு உள்ளிட்ட சீர்வரிசைகளை தாம்பூலத்தில் வைத்து ஊர்வலமாக சுமந்து சென்றனர்.

தர்காவில் இருந்த கல்லார் ஜமாத்தார்கள் மேளதாளம் முழங்க, மீனவர்களை ஆரத்தழுவி வரவேற்று, அவர்களுக்கு மாலை அணிவித்து, தர்காவுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ஆண்டவர் சமாதியில் பூசப்படுவதற்காக தாங்கள் கொண்டுவந்த 10 கிலோ சந்தனம் அடங்கிய குடம் உள்ளிட்ட சீர்வரிசைகளை தர்காவில் குவிந்திருந்த முஸ்லிம்களிடம் மீனவர்கள் வழங்கினர்.

அவற்றைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம்கள், தர்காவுக்கு முதன்முறையாக சீர்வரிசை வழங்கி சிறப்பித்த மீனவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, விருந்து அளித்து, கவுரவித்தனர். தொடர்ந்து, சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வு மத நல்லிணத்துக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தது.

x