அண்ணாமலை இமயமலைக்கு ஆன்மிக பயணம்: ரஜினி வழியில் பாபா முத்திரை!


சென்னை: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 3 நாள் உத்தரகாண்ட், இமயமலை பகுதிகளுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார். அவர் ரஜினியில் நண்பருடன் ஆன்மிக பயணத்தில் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதே மேடையில், அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதேசமயம், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அண்ணாமலை நேற்று 3 நாள் ஆன்மிக பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து உத்தரகாண்ட் சென்றுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புனித தலங்களில் அண்ணாமலை வழிபாடு செய்ய இருப்பதாகவும், பின்னர், அங்கிருந்து இமயமலை சென்று, பாபாவை வழிபட்டு அவர் தியானத்தில் ஈடுபட இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். 3 நாள் ஆன்மிக பயணம் முடிவடைந்து டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

தற்போது அவர் வெள்ளை உடையில், ரஜினியின் நண்பருடன் ஆன்மிக பயணத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் பாபா படத்தில் ரஜினி காட்டிய முத்திரையை அண்ணாமலை காட்டியுள்ளார்.

x