பக்தர்கள் புடைசூழ ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டா ள் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம். | படம்: அ.கோபாலகிருஷ்ணன் |

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மாலை ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசங்களில் 90-வது தலமான ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய 2 ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து, பங்குனி உத்திர நாளில் ரெங்கமன்னாரைத் திருமணம் செய்துகொண்டார்.

இதனால், ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் மணப்பந்தலில் மாலை 4 மணிக்கு ரெங்கமன்னார் எழுந்தருளினார். அதன்பின், பெரியாழ்வார் பூர்ண கும்பத்துடன் எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பாடாகி மணப்பந்தலில் எழுந்தருளினார்.

திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாள் சீதனமாக அனுப்பிய பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து, ரெங்கமன்னாருக்கு பெரியாழ்வார் ஆண்டாளை கன்னிகாதானம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

மாலை 6.15 மணிக்கு திவ்ய தம்பதிகள் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. விழாவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஶ்ரீசடகோபன் ராமானுஜ ஜீயர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

x