குமுளி: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழாவுக்காக தேக்கடியில் இருமாநில அதிகாரிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது.
இது வனப்பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு சித்திரை மாத முழு நிலவன்று ஒருநாள் மட்டுமே திருவிழா நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான விழா மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.
தேனி, இடுக்கி ஆட்சியர்கள் ரஞ்ஜீத்சிங், விக்னேஷ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக வன பாதுகாவலர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரதீவ், பெரியாறு புலிகள் சரணாலய துணை இயக்குநர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலை 6 முதல் பிற்பகல் 2.30மணி வரை தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் மாலை 5 மணிக்கு வெளியேற வேண்டும். மேலும் கடந்த ஆண்டுகளில் பின்பற்ற விதிமுறைகளை இம்முறையும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.
மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பஞ்சுராஜா, சரவணன், சபரிநாதன்,மகளிர் அணி நிர்வாகிகள் சாந்தி,சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அறக்கட்டளை சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்: கூடுதல் ஜீப்களை உரிய கட்டணத்துடன் இயக்க வேண்டும். வழக்கமாக அன்னதான உணவுகளை ஏற்றிச் செல்ல 6 டிராக்டர்கள் அனுமதிக்கப்பட்டன. இம்முறை கூடுதலாக ஒரு டிராக்டரை அனுமதிக்க வேண்டும். வனப்பாதைகளை முறையாக சீரமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்கு வரும் இருமாநில பக்தர்களுக்கு சுகாதாரம், குடிநீர், நிழற்பந்தல், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர முடிவு செய்யப்பட்டது. பிளாஸ்டிக், தீப்பற்றக்கூடிய பொருட்கள், கேமரா, ட்ரோன்கள் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இருமாநில அதிகாரிகளும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்காக தமிழக பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், செய்து தர வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.