ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள், பெருமாளை மணமுடிக்க எண்ணி மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பு இருந்தார். அதன் பலனாக, பங்குனி உத்திரம் நாளில் ஶ்ரீரெங்கம் ரெங்கமன்னாரை ஆண்டாள் மணம் புரிந்தார் என்பது கோயில் வரலாறு.
ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் நாளில் ஆண்டாள் - ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை கொடிப்பட்டம் மேள தாளம் முழங்க மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திவ்ய தம்பதி ஆண்டாள் - ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள, கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. மாலை ஆண்டாள் - ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் 5-ம் நாளான ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7.05 மணிக்கு செப்புத் தேரோட்டமும், மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் ஆகியோர் திருக்கல்யாண திருவிழா செய்து வருகின்றனர்.