உத்தரகோசமங்கை: சந்தனக்காப்பு களையப்பட்டு திருமேனியாய் காட்சியளிக்கும் மரகத நடராஜர்!


ராமநாதபுரம்: திரு உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை மரகத நடராஜர் சந்தனக்காப்பு களையப்பட்டு திருமேனியாய் காட்சியளித்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் ஆதிசிதம்பரம் எனப்படும் புகழ்பெற்ற சிவன்கோயிலான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பார்வதி தேவிக்கு சிவப்பெருமான் ரகசியமாக உபதேசம் செய்த தலம். இங்குள்ள விலைமதிப்பற்ற ஒற்றை பச்சை மரகத கல்லினால் ஆன நடராஜர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது.

இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு பிரதான ராஜகோபுரங்கள் மற்றும் உள், வெளி வளாகத்திலுள்ள 25 கோயில் விமான கோபுரங்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இவ்விழாவுக்காக 100 அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஏப். 4-ம் தேதி காலை 9 முதல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இங்கு தனி சந்நியிலுள்ள 6 அடி உயரமுள்ள பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை ஒலி, ஒளியால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தினத்தன்று சந்நனக் காப்பு களையப்பட்டு 32 வகை மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மறுநாள் அதிகாலையில் புதிய சந்தனக்காப்பு பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதனால் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே பச்சை மரகத நடாஜரை சந்தனம் இன்றி திருமேனியாய் தரிசிக்க முடியும்.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மரகத நடராஜர் சந்நிதி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் சந்தனக்காப்பு களையப்பட்டு, நடராஜர் திருமேனியாய் காட்சியளிக்கிறார். நேற்று காலை முதல் பக்தர்கள் நடராஜரை தரிசித்து வருகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்து 4-ம் தேதி அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய சந்தனம் காப்பு சாத்தப்பட்டு அன்றிரவு நடை சாற்றப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

x