நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் தூக்க திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது. இதற்காக தூக்க வில் கோயிலை சுற்றி 300-க்கும் மேற்பட்ட முறை வலம் வந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்கநேர்ச்சை நடைபெறுவது வழக்கம். இக்கோயில் குமரி - கேரள எல்லை பகுதியில் இருப்பதால் இருமாநில பக்தர்களும் விழாவில் பங்கேற்பது சிறப்பம்சமாகும். இந்த ஆண்டு குழந்தைகளுக்காகான தூக்க திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றன. குழந்தைகளை கையில் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தும் தூக்கக்காரர்களின் பயிற்சி கோயில் வளாகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றது. மேலும் தூக்கத்தில் பயன்படுத்தப்படும் வில்வண்டியோட்ட நிகழ்ச்சி நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை துவங்கியது. குழந்தையில்லாத தம்பதிகளும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும், அம்மனை வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றவர்களும், மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் தமிழக, கேரள பக்தர்கள் தூக்க நேர்சையில் பங்கேற்பர்.
இதில் குழந்தைகளை கையில் ஏந்தும் தூக்கக்காரர்களும், நேர்த்திக் கடன் செலுத்தும் குழந்தைகளும் குடும்பத்துடன் விரதம் இருந்து விழாவில் பங்கேற்பது வழக்கம். அதிகாலையில் துவங்கிய தூக்க நேர்ச்சையில் பச்சிளம் குழந்தைகளை நேர்ச்சைக்கு கொடுத்த பின்னர், வில்வண்டியில் அந்தரத்தில் குழந்தைகளை தூக்ககாரர்கள் கையில் வைத்துக்கொண்டு கோவிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
சுமார் 40 அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் வண்டியில் பொருத்தபட்டு ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்ககாரர்கள் என 4பேர் இந்த வில்லுடன் பிணைக்கபட்டு அவர்களின் ஒவ்வொருவர் கைகளில் நேர்ச்சைக்கான குழந்தைகள் வழக்கபட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு முறையும் 4 குழந்தைகளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டன. இந்த தூக்கவண்டியை பக்தர்கள் சரண கோஷத்துடன் ஆலயத்தை சுற்றி வந்து தூக்க நேர்ச்சையை நிறைவேற்றினர்.
இந்த ஆண்டு 1,166 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சைக்கு பதிவு செய்து நேர்ச்சை நடைபெற்றது. 300 முறைக்கு மேல் தூக்க வில்லில் குழந்தைகளுடன் தூக்கக்காரர்கள் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இன்று துவங்கிய தூக்கநேர்சை நாளை (புதன்கிழமை) காலை வரை விடிய விடிய நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தூக்க நேர்ச்சையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் கொல்லங்கோட்டிற்கு சிறப்பு அரசு பேரூந்துகள் இயக்கப்பட்டன.