கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது.
உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்ச்சாகத்துடன் இன்று (மார்ச் 31) கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈதுல்பித்ர் எனும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன்படி கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், லால்பேட்டை, பண்ருட்டி, ஆயங்குடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
புத்தாடை அணிந்து அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர். சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை ஹஜ்ரத் முஹம்மதுஆரிப் உலவியு தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் தொழுகைக்கு பின்னர் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.