சபரிமலை: பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (ஏப்.1) நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, உத்திர பூஜை, மாதாந்திர பூஜை நடைபெற உள்ளதால், 18 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா வுக்காக ஏப்.2-ம் தேதி கொடியேற்றப்படுகிறது. இதற்காக, நாளை (ஏப்.1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவபலி, இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஏப்.10-ம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு, இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. விழாவின் உச்ச நிகழ்வாக ஏப்.11-ம் தேதி காலை 7 மணிக்கு உஷபூஜை முடிந்ததும், யானை மீது சுவாமி எழுந்தருள்கிறார். பின்னர், பம்பை நதியில் ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சி (ஆராட்டு) நடைபெறுகிறது.
தொடர்ந்து, நதிக் கரையோரம் உள்ள கணபதி கோயில் அருகே பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார். அன்று மாலை சுவாமி சந்நிதானம் அடைந்ததும் அடுத்த 2 நாட்கள் உத்திரத் திருவிழா நடைபெறும். தொடர்ந்து, சித்திரை மாத மாதாந்திர பூஜை தொடங்குவதால், ஏப்ரல் 18-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெறுகின்றன.
எனவே, ஏப்.1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சபரிமலையில் கோயில் நடை தொடர்ச்சியாகத் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 18-ம் படி ஏறியதும் பக்தர்கள் நேரடியாக சிறப்புப் பாதை வழியே தரிசனத்துக்குக் கடந்த மாதம் முதல் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தடவையும் அதே முறை பின்பற்றப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.