‘சாதா பூங்கா’ ஆன திருநள்ளாறு ஆன்மிக பூங்கா!


திருநள்ளாறு ஆன்மிகப் பூங்காவில் நவக்கிரக சிலைகள் அமைக்கும் திட்டம் இல்லை என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் என்.ரங்கசாமி அளித்த பதிலால் பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

புதுச்சேரி அரசால், திருநள்ளாறு ‘கோயில் நகரமாக’ அறிவிக்கப்பட்டு, ஹட்கோ நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹட்கோ மற்றும் மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்ட நிதியுதவியுடன், ரூ.7.77 கோடி செலவில் ஆன்மிகப் பூங்கா அமைக்கப் பட்டு, 2023 ஏப்.21ம் தேதி முதல்வர் என்.ரங்கசாமியால் மக்கள் பயன் பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இப்பூங்காவில் நவக்கிரகங்களுக்கு தனித்தனியாக சிறிய அளவிலான கோபுரங்கள், தியான மண்டபம், மூலிகைத் தோட்டம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

தியானக்கூடத்தில் ஒலி, ஒளி காட்சிகளுக்கான அமைப்புகள், நவக்கிரக பீடங்களில் அந்தந்த கிரகத்துக்கான சிலைகள் அமைப்பது உள்ளிட்டவை 2023 டிசம்பரில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், பூங்காவில் உள்ள குளத்தின் மையப் பகுதியில் தனியார் பங்களிப்புடன் 72 அடி உயர சிவன் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், நவக்கிரக மண்டபங்களில் உள்ள சிமென்ட் மற்றும் பெயின்ட் பூச்சுக்கள் பெயர்ந்தும், தியான மண்டபம் பொலிவிழந்தும், மூலிகை பூங்கா மற்றும் நடைபாதைகளில் புதர் மண்டியும் காணப்படுகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆன்மிக பூங்கா குறித்து திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆர்.சிவாவின் கேள்வி ஒன்றுக்கு நேற்று முன்தினம் பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, ”திருநள்ளாறு ஆன்மிகப் பூங்காவில் நவக்கிரகச் சிலைகள், சிவன் சிலை அமைக்கும் திட்டம் இல்லை. மத்திய அரசின் சுற்றுலா அமைச்சக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் வழிகாட்டுத லில் தெய்வங்களின் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. நுழைவு வாயில் அமைப்பது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம். பூங்கா பராமரிப்பை தனியாரிடம் தர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

முதல்வரின் இந்த பதில் காரைக்கால் பொதுமக்கள், பக்தர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருநள்ளாறைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் கூறியது: நவக்கிரக கோபுரங்களில் சிலைகள் அமைத்தால் தான் அது முழுமைப் பெற்றதாக இருக்கும். இல்லையெனில், அந்த இடத்துக்கு ஆன்மிகப் பூங்கா என்ற பெயரே பொருத்தமற்றதாகிவிடும். அதனால், ஏதாவது ஒரு வகையில் சிலைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து எம்எல்ஏ பி.ஆர்.சிவா ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: முதல்வரின் பதில் மக்களுக்கு திருப்தியளிக்க வில்லை என்பது உண்மை தான். சிலைகள் இல்லாமல் நவக்கிர கோபுரங்கள் இருப்பதால் பயன் இல்லை. ஏதாவது ஒரு மாற்று ஏற்பாட்டின்படி, அங்கு சிலைகள் அமைக்க அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.

x