புதுச்சேரி: அன்னை மிர்ரா அல்பசா புதுச்சேரிக்கு வந்த 111-வது ஆண்டு விழா புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 1878 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பாரிசில் மிர்ரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. அரவிந்தரிடம் சரணடைந்து அனைவரும் போற்றும் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். நேர்மையுடனும், சத்தியத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்று வலியுறுத்திய அவர் உண்மையைப் போற்றினார்.
கடந்த 1914-ம் ஆண்டு 36 வயதில் கப்பல், படகு மற்றும் ரயில் மூலம் அன்னை மிர்ரா புதுவைக்கு வந்தார். மார்ச் 29-ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்தார். இதை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி உலக அமைதி அறக்கட்டளை, பங்கவாணி அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி புதுச்சேரி ரயில் நிலையத்துடன் இணைந்து நடைபெற்றது.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் அரவிந்தர் அன்னை புகைப்படங்கள் முதலாவது பிளாட்பார்மில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்றார். பங்கவாணி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திவ்யேந்து கோஸ்வாமி அன்னை வருகையின் சிறப்புகள் குறித்து விவரித்தார். இந்நிகழ்வில் புத்தக சங்க இயக்குநர் முருகன் மற்றும் பக்தர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.