தொட்டியம் கோயிலில் ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு; பக்தர்கள் கோலாகலம்


திருச்சி: தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் “அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானை பொங்கல் வைத்து வழிபாடு” விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டு அம்மனுக்கு பொங்கலிட்டனர். முன்னதாக, தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் கருவறை யின் உள்ளே 2 விளக்குகள் ஏற்றப்பட்டு கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து 1,000 பானைகளில் பொங்கல் வைக்கபட்டது.

பின்னர், அந்தப் பொங்கல் படையல் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கோயில் கருவறை கதவுகள் 7 நாட்கள் வரை அடைத்து இருக்கும். அதன்பின் கதவு திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

x