திருநள்ளாறு கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சியா? - பூஜைகள் குறித்து நிர்வாக அதிகாரி விளக்கம்


காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை (மார்ச் 29) சனிப் பெயர்ச்சி நிகழ உள்ள நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், மரபுபடி வாக்கிய பஞ்சாங்க முறையின் அடிப்படையிலேயே சனிப் பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இக்கோயிலில் அடுத்தாண்டு மார்ச் மாதம் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நாளை (மார்ச் 29) இரவு 9.44 மணிக்கு சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளதாலும், நாட்டில் பெரும்பான்மையானோர் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுவோராக இருப்பதாலும், நாளை சனிக் கிழமையாக இருப்பதாலும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி கு.அருணகிரி நாதன் நேற்று கூறியது: வழக்கமான 6 கால பூஜைகள் சனிக் கிழமையும் நடைபெறும். கோடை விடுமுறையின்போது பக்தர்கள் திரளாக வருவது வழக்கம் என்பதால் அதற்கேற்ப சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 29-ம் தேதி சனிக் கிழமை அன்று சனிப் பெயர்ச்சிக்கான எந்த முன்னேற்பாடும் கோயிலில் செய்யப்படவில்லை. நாள்தோறும் இரவு 8.45 மணி முதல் இரவு 9 மணிக்குள் கோயில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மார்ச் 29ம் தேதி இரவு அதிகளவில் பக்தர்கள் கோயிலுக்கு வரும் பட்சத்தில், அனைவரும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வகையில் கோயில் நடை திறந்திருக்கும் என்றார்.

x