தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ல் குடமுழுக்கு விழா!


தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் 1982-ம் ஆண்டு 9 நிலை ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, ராஜகோபுரம் குடமுழுக்கு விழா 1990-ம் ஆண்டு நடந்தது. கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய திருப்பணி வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. மார்ச் இறுதிக்குள் திருப்பணி வேலைகளை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்தில் பழுதடைந்த சிற்பங்களை சீரமைத்தல், சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசுதல், கோயில் உள்பகுதியில் சகஸ்ர லிங்கம், பராசக்தி பீடம், சொக்கநாதர்- மீனாட்சி சந்நிதி, காலபைரவர் சந்நிதி, உலகம்மன் சந்நிதி, முருகன் சந்நிதி, சுவாமி சந்நிதியில் திருப்பணி வேலைகள் முடியும் நிலையில் உள்ளன. சுவாமி, அம்பாள் சந்நிதியில் புதிய கொடிமரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வருகிற 3-ம் தேதி காலை 5 மணிக்கு பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபாட்டுடன் குடமுழுக்கு விழா தொடங்குகிறது. 4-ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலையில் முதல்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 5-ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, 6-ம் தேதி காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

வரும் 7-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், ஆறாம்கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, 5 மணி முதல் 6 மணிக்குள் விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு விழா, யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு மேல் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திக ளுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இரவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. யாகசாலை பூஜை நேரங்களில் சதுர் வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.

x