காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அடுத்த ஆண்டு தான், சனிப் பெயர்ச்சி விழா நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி கு.அருணாகிரிநாதன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப் பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, வரும் 29ம் தேதி அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளி வந்துள்ளன. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்க முறை பின்பற்றப்படுகிறது.
இதன்படி, இக்கோயிலில் 2026ம் ஆண்டில் தான் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறும். எனவே, வரும் 29ம் தேதி வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.