100 ஆண்டுகளுக்கு பிறகு கீரனூர் வாகீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா!


பழநியை அடுத்த கீரனூரில் உள்ள வாகீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பழநியை அடுத்த கீரனூர் கிராமத்தில் வாகீஸ்வரர் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டில் உள்ள பழமையான சிவத்தலங்களில் இக்கோயிலும் ஒன்று. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. இக்கோயிலில் சுயம்புவாக வாகீஸ்வரர் அருள்புகிறார். இக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபஷேகம் நடந்தது. காலப்போக்கில் கோயில் கோபுரங்கள், கட்டிடங்கள் சிதிலமடைந்துவிட்டன.

மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் 15-ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை வேள்வி பூஜைகள் தொடங்கின. நேற்று காலை நான்காம் கால வேள்வி பூஜைகள் முடிந்து, யாக சாலையிலிருந்து புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலை சுற்றி வந்தனர்.

காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்ரமண்ய குருக்கள் ஆகியோர் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர், மூலவர் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

x