சுவாமிமலை: திருவலஞ்சுழி அரசலாற்றில் நாளை வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி


தஞ்சை: கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் வள்ளி- சண்முகர் திருமணத்தையொட்டி, திருவலஞ்சுழி அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி நாளை (மார்ச் 18) நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் சுவாமி மலையில் இந்த விழா தத்ரூபமாக நடைபெறும். இதன்படி, நிகழாண்டு இன்று (மார்ச் 17) காலை வள்ளி, தெய்வானை உடனாய சண்முகர் பெருமான், வேடமூர்த்தி, வள்ளி நாயகி, நாரதர், நம்பிராஜன், நந்தமோகினி சுவாமிகள் உற்சவ மண்டபம் எழுந்தருளல், இரவு வள்ளி நாயகி திருவலஞ்சுழி கோயிலில் தினைப்புனை காட்சிக்காக செல்லுதல், வேடமூர்த்தி வீதியுலா வந்து திருவலஞ்சுழி கோயிலுக்கு எழுந்தருளல், அங்கு தினைப்புனை காட்சி, திருவலஞ்சுழி கோயிலில் வேல வேட விருத்த வேங்கை மரக்காட்சிகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து, நாளை (மார்ச் 18) அதிகாலை 5 மணிக்கு அரசலாற்றில் வள்ளியை யானை விரட்டுதல், சண்முகர் காட்சி தருதல், அன்று மாலை நம்பிராஜன் சீர்கொண்டு வருதல் ஆகியனவும், அதைத்தொடர்ந்து வள்ளி-சண்முகர் திருக் கல்யாணமும் நடைபெறுகிறது.

மார்ச் 19, 20 ஆகிய 2 நாட்கள் ஊஞ்சல் உற்சவ புறப்பாடும், மார்ச் 21ம் தேதி வள்ளி-தெய்வானை உடனாய சண்முகர் திருக்கல்யாணமும், மார்ச் 22-ம் தேதி காலை 1,008 சங்காபிஷேகம், அன்றிரவு வெள்ளி ரதத்தில் சுவாமிகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, பங்குனி உத்தரத்தையொட்டி அடுத்த மாதம் ஏப்.11-ம் தேதி காலை 11 மணிக்கு வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி, இரவு சுவாமிகள் யதாஸ்தானம் வந்தடைதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

x