‘கோயிலில் இருந்து மசூதி வரை தீக்குண்டம்’ - மதநல்லிணக்கம் மிளிரும் தாளவாடி மாரியம்மன் கோயில் திருவிழா!


ஈரோடு: மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக கோயிலில் இருந்து சகல வாத்தியங்களுடன் ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு அம்மன் திரும்புதல், அம்மன் மலர் ஊஞ்சல் ஆடுதல், அபிஷேக பூஜைகள் நடந்தன. பீரேஸ்வரா நடனம், பார்வதி குறவர் நடனம் மற்றும் மேள தாளங்களுடன், நேற்று முன் தினம் மாலை அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்களின் கரகோஷம்: நேற்று காலை மேள தாளங்கள் முழங்க, கோயிலின் தலைமை பூசாரி நவீன் தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், உற்சவர் சிலையுடன் ஆற்றுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்படும் நிகழ்வின் போது, இளைஞர்கள் காவல் தெய்வங்களின் வேடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பக்தர்கள் விறகுகளை ஏற்றி வந்து கோவில் முன்பு அடுக்கிய நிலையில், 30 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட குண்டம் தயாரானது. ஆற்றில் இருந்து உற்சவர் சிலையுடன் ஊர்வலமாக வந்த பூசாரி நவீன், பக்தர்களின் கரகோஷத்துக்கு இடையே குண்டம் இறங்கி கோயில் பிரகாரத்துக்குள் சென்றார். இத்திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி, பூசாரி மட்டுமே குண்டம் இறங்க அனுமதிப்படுவது வழக்கமாக உள்ளது. குண்டம் திருவிழாவை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மத நல்லிணக்கத்துக்கு அடையாளம்: தாளவாடி மாரியம்மன் கோயிலும், இஸ்லாமியர்கள் வழிபாட்டுத்தலமான மசூதியும் அருகருகே அமைந்துள்ளன. மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின் போது, மசூதியின் வாயிலிலிருந்து, கோயில் வரை தீக்குண்டம் அமைக்கப்படுவது தனிச்சிறப்பாகும். மத நல்லிணக்கத்தோடு நடைபெறும் இந்த விழாவில் குண்டம் அமைக்கும் போது, இஸ்லாமிய மக்களும் விழாவில் பங்கேற்பதும், குண்டம் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினரும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவிப்பதும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

x